Skip to main content

'கூரன் 'திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
kooran movie event

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

'கூரன்'  திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார். படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் கலந்து கொண்டது. 

இந்த விழாவில் மேனகா சஞ்சய் காந்தி பேசுகையில், “இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக  ஒப்புக்கொண்டேன். திரைப்படத்தில் சிறிய திரைப்படம்  என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது. இந்தப் படத்தில் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களிலிருந்து தொடங்குவோம்.

நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன். நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்,  நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன .அவை அனைத்தையுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன .ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை” என்றார். மேலும் இப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். 

சார்ந்த செய்திகள்