கிருத்திகா உதயநிதி 'பேப்பர் ராக்கெட்' என்ற இணைய தொடரை இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொடரை பார்த்த உதயநிதி நன்றாக இருக்கிறது என்று பாராட்டியதுடன் வெப் தொடரின் சீசன் 2 க்காக காத்திருக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, "பேப்பர் ராக்கெட்- க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவர் அனைவரும் இந்த தொடரை பார்க்கலாம். அழுகை, சிரிப்பு என எல்லா உணர்வுகளையும் பேப்பர் ராக்கெட் பிரதிபலிக்கும். இறப்பு எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும். அதனால் நாம ஏன் அதை நினைத்து கவலைப்படணும், மாறாக அதை கொண்டாடலாம் என்ற வேறு கண்ணோட்டத்தில் தான் இந்த தொடர் எடுக்கப்பட்டது" என்றார்.
இதையடுத்து, "இறப்பிற்கு பிறகு எடுத்துச்செல்லப்படும் வண்டியை நீங்கள் ட்ரிப்பிற்காக பயன்படுத்தியுள்ளீர்களே என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கிருத்திகா, "நான் சாவையே ஒரு ட்ரிப்பாகதான் பார்க்கிறேன். சாவுன்னு சொல்றதுக்கே பயப்படுகிறோம். அதுனாலதான் இந்த தொடரில் ஒரு சாவு வண்டியை ட்ரிப் வண்டியாக மாற்றினோம். இறந்தவர்களை சாவு வண்டியில் எடுத்து செல்லும் போது அழுகுறோம், வருத்தப்படுறோம். ஆனால் அவர்களும் அந்த வண்டியில் எங்கேயோ பயணிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டால் மனதிற்கு சிறிய ஆறுதல் கிடைக்கும்" என்றார்.