அசுரன் திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரமான சிதம்பரம் என்ற பாத்திரத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் தனுஷ் உடன் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
"மொதல்ல தனுஷ் சார் பார்க்கும் போது ரொம்பவே பயமா இருந்துது. இவர் நம்மள எங்க மதிக்கப் போரார்னுதான் நெனச்சேன். சின்ன பையன்தான நான், கண்டிப்பா என் கூட க்ளோஸ் ஆக இருக்க மாட்டார்னுதான் நெனச்சேன். ஆனா அவர் அப்படியே அதுக்கு எதிரா இருந்தார். உண்மையிலேயே செம்ம கேரக்டர். ஷூட்டிங் அப்போ நான் எப்பவுமே அவர் கூடத்தான் இருப்பேன். எனக்கு ஷாட் ஓவர்னா தனுஷ் சார் கூடத்தான் இருப்பேன். அப்பப்போ என்னை கிண்டல் பண்ணுவார்.
ஒரு நாள் என்கிட்டே வந்து 'என்னடா இப்போல்லாம் உன்ன கென் சார்ன்னு கூப்பிடணுமாமே?'ன்னு கேட்டார். 'சார் எனக்கு ஒன்னும் தெரியாது, நான் அப்படிலாம் எதுவும் சொல்லல சார்'ன்னு சொன்னேன். அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு 'கென் சார், வாங்க கென் சார்'ன்னு கலாய்த்தார். சில நேரங்கள்ல பேசிட்டே இருக்கும் போது மொக்க ஜோக்ஸ் சொல்லிடுவேன். உதாரணத்துக்கு 'எறும்பு கட் ஆனா என்ன ஆகும்?'னு கேப்பேன், 'செத்துப் போய்டும்'னு அவர் சொல்வாரு, 'இல்ல சார் அது கட்டெறும்பு ஆய்டும்'னு சொல்வேன். அதுக்கு 'வெரி பேட்'ன்னு சொல்வாரு. அதுக்கப்புறம், நான் ஏதாவது ஜோக் சொல்லவான்னு கேட்டாலே போதும், 'டேய் கென்.. வேணாம்டா. ப்ளீஸ் வேணாம்'னு சொல்வார். அவர்கூட இவ்வளவு க்ளோசா இருக்க வாய்ப்பு கிடைச்சது பெரிய சந்தோஷம்".