நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி மற்றும் அவர் நடித்து வந்த சீரியல் நடிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்பு செய்தியாளர்களிடம் மாரிமுத்துவுடன் பணியாற்றியதை கண்ணீர் மல்கத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், "பிரபல இயக்குநரும் சிறந்த பகுத்தறிவாளரும் அதேபோல உயர்ந்த நடிகருமாக, எல்லாவற்றையும் தாண்டிய ஒரு தன்னம்பிக்கை மிகுந்தவரானவர். ஒரு தனித்துவமான உழைப்பால் உயர்ந்த ஒரு பெருமகனான தோழர் மாரிமுத்துவின் இழப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் பழகியதில்லை. அதே நேரத்தில் அவருடைய கருத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. அவரது குடும்பத்துக்கு மட்டும் பேரிழப்பு இல்லை. மேலும் கலையுலகத்திற்கும் அதையும் தாண்டி பகுத்தறிவு உலகத்துக்கும் பேரிழப்பு.
காரணம் என்னவென்றால், இப்படிப்பட்ட அற்புதமான நடிகர், இயக்குநர், உழைப்பால் உயர்ந்தவர். அப்படிப்பட்ட அவர் எப்படி தன்னம்பிக்கையோடு இருக்கிறார் என்பதற்கு அவருடைய தெளிவான கொள்கைகள் பார்க்கும்போது தெரிகிறது. அவருடைய பேட்டியை சில நாட்கள் முன்பு பார்த்தேன். பின்பு அவரின் நடிப்பையும் பார்த்தேன். அதிகமாக சீரியலில் நடிப்பவர்களை பார்ப்பதற்கு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் அவருடைய கொள்கையை அடிப்படையாக கொண்டும் அவர் பேட்டிகளை பார்க்கிறபொழுது அவரை பெரியார் திடலுக்கு அழைத்து, வருகிற பொங்கல் நேரத்தில் அவருக்கு பெரியார் விருது வழங்க முடிவெடுத்திருந்தோம். ஆனால் இப்போது இயற்கை அவரை பறித்துவிட்டது. அவர் போன்று ஒருவர் கலையுலகத்திற்கும், பகுத்தறிவு இயக்கத்திற்கும் மீண்டும் கிடைப்பாரா என நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு எங்கள் வீர வணக்கம்" என்றார்.