Skip to main content

கல்விக்காக கயல் ஆனந்தி மேற்கொள்ளும் பயணம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
ncvnvnjh

 

அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி” ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி From நடுக்காவேரி”. அப்புண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறும்போது....

 

"இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விஷயங்களை தான் திரைக்கதையாக மாற்றினேன். ஒரு வகையில் நான் ஆண் கமலி. இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான்  கதை. கிராமத்தில் இருந்துவந்து IIT-க்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும். இப்போதும் கிராமபுறங்களில் பென்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை. அதனை வெளிக்கொண்டுவரும் படைப்பாக இப்படம் இருக்கும். 

 

இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும். என் கதைக்கான பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி மிகச்சரியானவராக தோன்றினார். கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர். இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள். கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப்பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையை தேடியபோது, நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது.  அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம், அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா என கேட்டேன். 

 

அவர்களும்  ஒப்புக்கொண்டார்கள் சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களை பணியை செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர் அதி திறமைசாலிகள் அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வரவேண்டும். இப்படத்தில் நக்கலைட்ஸ் குழுவினர்  ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார். தீனதயாளன் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான, அற்புத இசையை தந்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும் வரும் பிப்ரவரி 19 உலகம் முழுவதும் மாஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சார்ந்த செய்திகள்