கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி தற்போது '777 சார்லி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். பாபி சிம்ஹா முதன் முதலில் கன்னட திரையுலகில் அறிமுகமாகும் இப்படம், தமிழ் தெலுங்கு மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் கிரண் ராஜ் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெற்றுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ், "கரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட சினிமா துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியைப் பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்குக் கொடுத்தது. நான் இந்த படத்தைத் தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்த படம். இயக்குநர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் எனத் தெரியவில்லை இந்த படத்தின் கதை நிச்சயமாகக் கூறப் பட வேண்டியது. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும்" எனத் தெரிவித்துள்ளார்.