Skip to main content

"இது எனது கனவு படம்" - கார்த்திக் சுப்புராஜ் சிலிர்ப்பு!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

vggsdgs

 

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் ஜூன் 18 (இன்று) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர்களும் படக்குழுவினரும், இணையம் வழியே பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படம் குறித்து பேசும்போது...

 

"என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் முக்கியமான படம் ‘ஜகமே தந்திரம்’. இது எனது கனவுப் படம். இப்படத்தின் மையத்தை 2014லேயே உருவாக்கிவிட்டேன். ஆனால் 2018இல்தான் படம் உருவானது. படத்தின் கதை உலகம் முழுக்க நடப்பதாக இருப்பதால், உலகின் பல முனைகளிலிருந்தும் திறமையாளர்கள் பலர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள். அனைவரும் மிகவும் கடுமையான உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். பல தடைகள் கடந்து படம் இப்போது திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தின் இசை மிகவும் ஸ்பெஷலானது. எனது இயக்கத்தில் 'பேட்ட'  படம் தவிர எனது அனைத்து படங்களிலும் இசை சந்தோஷ் நாராயணன்தான். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அவர் உடன் இருந்திருக்கிறார். 

 

இப்படத்திற்காக  நிறைய புதுவிதமான  ஒலிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் பாடல்கள்தான் படத்திற்கு பெரிய விளம்பரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது இசை படத்தின் தன்மையை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படத்தில் ஹாலிவுட்டைச் சேர்ந்த பலர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் கதை நியூயார்க்கில் நடப்பதால், அங்கு நடிப்பதற்கு, ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவரைத் தேடினோம். ஜேம்ஸ் காஸ்மோ அங்கு மிகவும் பிரபலமானவர். அவருக்குத் திரைக்கதை அனுப்பினோம். அவருக்கும் பிடித்திருந்தது. அவருடன் வேலை பார்த்தபோது மிக எளிமையாக பழகினார். 

 

ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தனுஷ்தான் இப்படத்தின் மிக முக்கியமான தூண். அவரிடம் கதை சொன்னதிலிருந்தே இந்தக் கதையைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்தப் படம் உருவானதற்கும், இப்போது படம் வெளிவருவதுவரை அவரது பங்கு மிகப்பெரியது. படத்தில் சுருளியாக கலக்கியிருக்கிறார். அவரின் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதிலிருந்து, இந்தப் படத்திற்கு கிடைத்துவரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியாவது பெரும் மகிழ்ச்சி. படத்திற்கும் பெரிய ஆதரவு தாருங்கள். அனைவரும் படத்தைக் கண்டு களியுங்கள். நன்றி" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்