Skip to main content

யார்யா நீ? - உரிமையுடன் அழைத்த கார்த்தி

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
karthi speech in Meiyazhagan Thanks Meet

96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இதையொட்டி படத்தின் நீளத்தை 18 நிமிடங்கள் குறைத்து திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் வரவேற்பு தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சுவாமி, பிரேம் குமார் என படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கார்த்தி பேசுகையில், “தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி. ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன். மெட்ராஸ் படம் வெளியான சமயத்தில் பொழுதுபோக்கு படம் பண்ணினாலும் பருத்திவீரன், மெட்ராஸ் போன்ற படங்களையும் பண்ண வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் சொல்லியிருந்தார்கள். அதை நான் மறக்க மாட்டேன். இந்த படம் நிறைய உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. நல்ல கலை படைப்புக்கு முக்கியமான விஷயமே உரையாடலை ஏற்படுத்துவது தான். விவாதத்தை ஏற்படுத்துவது தான். அப்படி நிறைய விஷயங்களை இந்த படம் பேச வைத்திருக்கிறது. அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும். அப்படி ஒரு படமாக தான் இதை பார்க்கிறேன்.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மக்களுக்கு எண்ண ஓட்டம் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு பிறகு வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரி இருக்கும். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது. இன்று சர்ச்சையான விஷயங்கள் தான் நன்றாக போகிறது என்று சொல்லப்பட்டாலும் முன்பின் தெரியாதவருக்கு ஒருவர் செய்யும் உதவி குறித்த வீடியோ வெளியாகி அதனுடைய வியூஸ் எண்ணிக்கை தான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்த படம் பண்ணினோம்.

கோவிந்தராஜின் படத்தொகுப்பில் நிகழ்கால காட்சியையும் கடந்த கால காட்சியையும் எந்தவித நெருடலும் இன்றி அழகாக கோர்த்திருந்ததனர். கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது. பழைய சைக்கிளுக்கு அவ்வளவு வேல்யூ இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நாம் யாருக்கோ தெரியாமல் செய்யும் ஒரு உதவி அவர்களது வாழ்க்கையையே மாற்றும்போது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் தவறு என்ன இருக்கிறது ? இன்று ஒவ்வொருவரின் மனசாட்சியாக அவர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால் அதுதான் இசையின் வேல்யூ. எந்த இடத்திலும் சினிமா என்று தெரியாதபடி மகியின் ஒளிப்பதிவு இருந்தது. 

நமக்கு எதுவும் வராதவரை எதுவும் பிரச்சினை இல்லை என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் பின்னால் இருக்கிற ஒரு விஷயம் நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதை எடுத்து கண் முன்னால் பேசும்போது தான் அதன் சீரியஸ்னஸ் தெரிகிறது. அது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது எனக்கே ஒரு படிப்பினையாக இருந்தது. அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும்.

நாங்கள் சிறுவயதில் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும்போது உறவினர்கள் தங்களது தகுதிக்கு மீறி எங்களை கவனிப்பார்கள். உபசரிப்பார்கள். நாம் சாப்பிடுகிறோமா என கவனித்து பார்ப்பார்கள். சில நேரம் அதை கையில் தொட்டுப் பார்க்காமல் கூட திரும்பி வருவோம். இப்போது அதை நினைத்து பார்த்தால் நம் மீது அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டிய அவர்களை அங்கீகரிக்கிறோமா? அதை திருப்பிக் கொடுக்கிறோமா என திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் ஊருக்கு சென்றால் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. அது போன்ற உணர்வுகளை நாம் இழந்து விட்டோமா அல்லது மறந்து விட்டோமா என்கிற நிலையில் தான் இந்த படம் அதை திரும்பவும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் அளவிற்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கேரளாவிலும் அதே அளவிற்கு என வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இதன் மதிப்பு அதிகம் தெரிகிறது. இயக்குநர் பிரேம் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அர்விந்த் சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம். அதனால் அர்விந்த்சாமி சாருக்கு நன்றி சொல்ல முடியாது. அடிக்கடி அவரை போய் தொல்லை பண்ணிக் கொண்டுதான் இருப்பேன். பிரேம்குமார் எழுதிய கதையில் உள்ள வரிகள் ஏற்படுத்தாத உணர்வை அர்விந்த்சாமி தான் திரையில் கொண்டு வந்தார். அதனால் அவருக்குத்தான் அந்த பாராட்டு சேரும். சூர்யாவுக்காத் தான் கமல் சார் இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடி கொடுத்தார். அவருக்கு நன்றி. ஜோதிகா ரிலீஸூக்கு பிறகு தான் படம் பார்த்தார்.  ரொம்ப பெருமைப் படுவதாக சொன்னார். மேலும் வியாபாரம் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கும் நமக்கும் நெருக்கமான படங்கள் வந்து கொண்டே இருக்கனும் என்றார் ” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்