ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் படம் பற்றி கார்த்தி பேசுகையில், "நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான பயணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துக் கடந்து வந்திருக்கிறேன். தவறுகள் செய்யும்போது சரி செய்ய முயற்சித்திருக்கிறேன். இந்தப் பயணம் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதனால்தான் 17 வருடங்களில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். முதலில் மக்களின் அன்பைப் பெறுவதே மிகப்பெரிய விஷயம். நம்மை பிடிக்க வைக்க முடியாது. நாம் இயல்பாக இருப்பது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அப்படி அமைந்தது பெரிய ஆசிர்வாதம்.
25வது படம் மட்டுமல்ல, என் ஒவ்வொரு படமுமே ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் மாதிரியான அழுத்தமான எழுத்தாளர், இலக்கிய வாசிப்பு இருப்பவர்கள் சினிமாவுக்கு வரும்போதுதான் நமக்கு வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்கள், சூழல்கள் கிடைக்கும். இந்த ஜப்பான் கதாபாத்திரத்தை அவர் எங்கு பார்த்திருப்பார், எப்படி இதை உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன்.
அவர் கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டவர் என்பதால் ஜோக்கர், குக்கூ என அவர் படங்களில் பொதுநலன் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசியிருக்கிறார். அவர் நினைப்பதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சொல்லலாமே என்று யோசிக்கும்போதுதான் ஜப்பான் அமைந்தது. அவர் இயல்பிலேயே வழக்கமான கதைகளை படமாக எடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தான் இருக்கிறார். அதனால்தான் நிதானமாகத் தேடித் தேடிப் படம் எடுக்கிறார். கண்டிப்பா, இதில் அவர் பாணியில் ஒரு விஷயம் இருக்கிறது. அது மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஜப்பான் கெட்டவன் தான், ஆனால் இங்கு திருடன் என்று தனியாக ஒரு ரகம் இருக்கிறதா என்பதே ஜப்பானின் கேள்வி. இதைத்தான் ராஜு முருகன் சொன்னார். அந்தக் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த மாதிரியான விஷயங்கள் தான் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின" என்றார்.