த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நக்கீரனுடனான சமீபத்திய நேர்காணலில் ‘ஜெய் பீம்’ படம் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"சமீபத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் பார்த்தேன். மிக முக்கியமான பிரச்சனையை எடுத்து சிறப்பாகச் சொல்லியிருந்தார்கள். இந்தப் படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது வருத்தமான விஷயம். ஏனென்றால், இது அனைவருக்கும் சென்று சேர வேண்டிய படம். அதிகார அமைப்புகள் தீர்க்க முடியாத பழிகளை விளிம்புநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களின் தலையில் கொண்டுசேர்க்கிற விஷயங்களை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். காவல்துறை மட்டுமல்ல... அதிகார வர்க்கத்தின் எல்லா கைகளும் அவர்களை எப்படி கசக்கிப் பிழிகிறது என்பதையும் நாம் தொடர்ந்து பார்க்கிறோம். இது இன்று, நேற்று அல்ல... ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்து தொடரும் பிரச்சனை. அதை மிகவும் அழகாக திரையில் சொல்லியிருக்கிறார்கள்". இவ்வாறு கனிமொழி கூறினார்.