கங்கனா ரணாவத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே அரசியல் குறித்தும் தனது கருத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவை ஆதரித்து குரல் கொடுக்கிறார். இதனிடையே சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தேஜஸ் படம் படு தோல்வியை சந்தித்தது. பல தியேட்டர்களில் கூட்டம் வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் உத்தரப்பிரேதேச முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படத்தை சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து போட்டுக் காண்பித்தார். படம் பார்த்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் கங்கனா தெரிவித்திருந்தார்.
தமிழிலும் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். அதுவும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமெர்ஜென்சி படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவிலை பற்றிய சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். அப்போது அடுத்த வருடம் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கிருஷ்ணர் அருள் புரிந்தால் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் "பாஜக அரசின் முயற்சியால், 600 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்தியர்களாகிய நாம் இந்நாளைக் காண முடிகிறது. வெகு விமரிசையாக கோவிலை நிறுவுவோம். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்" என்றார். கங்கனா தேர்தலில் நிற்பது குறித்து கடந்த ஆண்டே பேச்சுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.