கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 3’, ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898 ஏ.டி.’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸில் வரும் திரைப்படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் ஆண்டுக்கு 100 நாள் நடக்கும் அந்த ரியாலிட்டி ஷோவில், தற்காலிகமாக விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக வரவிருக்கும் பிக் பாஸ் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்குப் போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவே அடிப்படை காரணம். தனிப்பட்ட முறையில் உங்கள் தொகுப்பாளராக இருந்தது சிறப்பான ஒன்று. அங்கு நான் எனது கற்றலை நேர்மையாகப் பகிர்ந்து கொண்டேன். இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாம் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024