Skip to main content

“நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரண செய்தி இல்லாதிருக்கட்டும்” -  கமல்  உருக்கம்

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

kamalhaasan talk about school students

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் திட்டியதற்காகவும், கண்டித்ததற்காகவும் தேர்வில் தோல்வியுற்றதாகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் நீட் தேர்வுகள் ஆகியவற்றில் தோல்வியுற்றதன் காரணமாக சமீபகாலமாக மாணவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், "தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வேதனை அத்தோடு தீரவில்லை. ஆசிரியர்களே, மாணவர்கள் தங்கள் வாழ்வின் கணிசமான நேரத்தை உங்களுடன் தான் செலவிடுகிறார்கள். நீங்கள் அவர்களை பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். சொந்த பிள்ளைகள் போலவும், ஆருயிர் நண்பனை போலவும் உங்கள் மாணவர்களை போலவும் நடத்துங்கள். உங்களை விட அவர்களை நன்கறிந்தவர்கள் இருக்க முடியாது. உங்களிடம் தனக்கு தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையை மாணவர்களின் மனங்களின் விதையுங்கள். 

 

ஊடகங்களுக்கு ஓர் விண்ணப்பம். தற்கொலைச் செய்திகளை ஒளிபரப்புகையில் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள இலவச மனநல ஆலோசனை வழங்கும் தற்கொலைத் தடுப்பு மையத்தின் எண்களோடு சேர்த்து அளிப்பதை ஓர் சமூகக் கடமையாகக் கைக்கொள்ளவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழக அரசு 'தற்கொலைத் தடுப்புப் படை' ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப் போல, பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து உதவவேண்டும். நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச் செய்தி இல்லாதிருக்கட்டும்.என்று நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்