Skip to main content

”ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் பார்த்து நம் மக்கள் பொறாமைப்பட்டாங்களானு தெரியல...” - விக்ரம் வெற்றி குறித்து கமல் ஜாலி பேச்சு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Kamal haasan

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் 
நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று ஒற்றையாளாக நின்று யாரும் கூறிவிட முடியாது. 200 பேர் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் தவறு செய்தால்கூட படத்தின் தோல்விக்கு அது காரணமாக அமைந்துவிடும். வேலை கிடைத்தால் போதும் என்று சினிமாவிற்கு வந்தவன் நான். எனக்கு சினிமாவில் நடிகனாக வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்ததில்லை. அந்த ஆசையை கிளப்பிவிட்டது பாலச்சந்தர் அவர்கள்தான். கடைசிவரை ஸ்டூடியோவிற்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் வரவேண்டுமா, வீடு கட்ட ஆசை இல்லையா, போய் நடிக்க ஆரம்பி என்றார். 

 

கடந்த 10 வருட காலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸான என்னுடைய படம் இதுதான். அதற்கு முக்கிய காரணம் மகேந்திரனும் தம்பி உதயநிதியும். இந்த வெற்றி ஈஸியாக வந்ததில்லை. அதனால் அதை நான் ஈஸியாகும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இங்கு பேசியவர்கள் கமல் சார் எனக்கு கார் கொடுத்தார், எனக்கு படம் கொடுத்தார் என்றெல்லாம் பேசினார்கள். உழைக்கும் மக்கள் அவர்களுடைய தினக்கூலியில் இருந்து சிறிய பணத்தை நம் படத்திற்கு கொடுத்துள்ளார்களே, அதுதான் மிகப்பெரிய கிப்ட். 

 

உங்களுடைய படத்தை பெஸ்டிவலில் ரிலீஸ் செய்யுங்கள், அல்லது ரிலீஸ் பெஸ்டிவலாக இருக்க வேண்டும் என்று அன்புச்செழியன் சொன்னார். அந்த வாழ்த்து பலித்துவிட்டது. விக்ரம் படத்தை மக்கள் பெஸ்டிவலாகக் கொண்டாடுகிறார்கள். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கே.ஜி.எஃப் பார்த்து நம் மக்கள் பொறாமைப்பட்டுவிட்டார்களா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் படத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வாழ்த்திக்கொண்டு இருந்தார்கள். அந்த வாழ்த்தும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்