தமிழக அரசு நடத்தும் சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகள் மாமல்லபுரத்தில் நேற்று (29.07.2022) முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் சுற்றின் முடிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 28-ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்புக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கலை நிகழ்ச்சிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்பார்வை கொண்டார். அதற்காக விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில், கலை நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் நடந்த உரையாடல் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "உலக நாயகன் கமல்ஹாசனுடன் நான் செலவழித்த சில மணி நேரங்கள் அவரது அருள் எனக்கு கிடைத்தது. அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் சேர்த்த நுணுக்கங்கள்.. அவருடனான இந்த குறிப்பிட்ட உரையாடல் என்னால் மறக்க முடியாதது" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, மாடுபிடி என்பதில் கூட காளை அடக்குதல் என்று நாம் சொல்லுவதில்லை. ஏனென்றால் அடுத்த நாள் அந்த மாட்டை விவசாயத்திற்கு கொண்டு போய்விடுவார்கள்" என்று விக்னேஷ் சிவனிடம் கமல் விளக்கமளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளபக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், "என்றும் நினைவில் வைத்திருக்க கூடிய நிகழ்வு. நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், நிகழ்வின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும் நிகழ்வு முடிந்த பிறகு தொலைபேசி வாயிலாக அழைத்ததற்கும். ஒலிம்பியாட் நிகழ்வை பற்றி உங்கள் குரலையும் பாராட்டுக்களையும் கேட்பதில் மகிழ்ச்சி. நீங்கள் அங்கு இருப்பது அந்த நாளை இன்னும் அழகாக்கியது" என குறிப்பிட்டுள்ளார்.