இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாக பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின், அவரது சொந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு நிதியுதவி வழங்கியிருந்தார். தெலுங்கானா மாநிலம் நாகர்நூல் மாவட்டத்தில் அய்தோல் என்ற கிராமத்தில் ஒரு பள்ளிக்குப் புதிதாக நான்கு அறைகள் கட்ட ரூ.66 லட்சம் நிதி கொடுத்திருந்தார். இதையடுத்து அந்த நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாக் அஷ்வின் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார்.
பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாக நாக் அஷ்வின் கூறியுள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தற்போது அதிக வசதிகளை வழங்கும் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.