தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் கடந்த ஜூன் 18 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரம்மாண்டமாக வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்துவருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து படக்குழுவினர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கும் நிலையில், இப்பட அனுபவம் குறித்து இப்படத்தில் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கலையரசன் பேசியுள்ளார். அதில்...
"இங்கிலாந்தில் பனி மிக மிக அதிகம். கடும் குளிர் வாட்டி எடுக்கும். நான் இந்தியாவில் இருந்து திரும்பியிருந்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும் சமயம் எல்லாம் கடுமையான குளிர் காரணமாக என்னால் காரை விட்டே இறங்க முடியவில்லை. படத்தின் இடைவேளை காட்சி கேன்டர்பரியில் எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் அங்கு கடும் குளிர் நிலவியது. அங்கு கேரவனும் இல்லை. என்னுடைய அறையும் வெகு தொலைவில் இருந்தது. வழக்கமாக இரவு நேர படப்பிடிப்பில் நான் தூங்க மாட்டேன்.
ஏனெனில், தூக்க கலக்கத்தில் கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியாது. அதனால், அந்தக் குளிரில் என் நடுக்கத்தைத் தவிர்க்க படப்பிடிப்பில் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தேன். என் நடுக்கத்தைக் கண்ட நடிகர் தனுஷ், அப்போதுதான் புதிதாக அவர் வாங்கியிருந்த, அவரது குளிர் தாங்கும் தெர்மல் ஆடையினை எனக்குத் தந்தார். அவரது செயல் என் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஒரு பெரிய நடிகர் போன்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் மிக எளிமையாக பழகினார். எல்லோரிடத்திலும் மிக நட்புடன் அன்பு காட்டினார்" என்றார்.