தமிழ் திரைத்துறை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களோடு எப்போதுமே இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும். அந்த வகையில் முன்னாள் முதல்வர்களான கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் பாராட்டு விழா நடத்திய வரலாறு தமிழ் திரைத்துறையினருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கோரிக்கை வைப்பதும், பாராட்டு செய்வதும் இயல்பாக நடப்பதே. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைத்துறை சார்பாகச் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த விழாவிற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்கள். அழைப்பின்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்விற்கு வருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார். இதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.