திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று இதுவரை நடந்த நிகழ்வில் ஜெயம் ரவி, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதனிடையே தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.