54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நேற்று (20.11.2023) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது. நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த நிலையில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’படத்தின் ட்ரைலர் இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில் பார்வதி திருவோது மற்றும் முன்னணி கதாபத்திரத்தில் சஞ்சனா சாங்கியுடன் பங்களாதேஷி நடிகர், ஜெயா அஹ்சான் நடிகின்றனர். முக்கிய துணை பாத்திரங்களில் பரேஷ் பாஹூஜா மற்றும் வருண் புத்ததேவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து ஒரு விஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம் 8 டிசம்பர் 2023 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. .