சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிறகு வெள்ளித்திரையில் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ், சமீபத்தில் வெளியான ஜோ படத்தின் அனுபவம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.
ஜோ படக்குழு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஒரே நேரத்தில் வந்தவர்கள். அந்த விதத்தில் அனைவரும் இணைந்து ஒரு வெற்றிப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரை நோக்கி வந்த போது எல்லோருக்கும் இருப்பது போல பல கஷ்டங்கள், சிக்கல்கள் அதெல்லாம் ஒரு வெற்றியைப் பார்த்த பிறகு சரியாகிடும்.
என் பார்ட்னர் கூட முதல் நாள் முதல் காட்சியின் போது என்னை திரையில் பார்த்ததும் ரொம்ப எமோஷனல் ஆனாங்க, அது படம் பார்த்து வந்த அழுகை இல்லை. அதற்கு பின்னால் இருந்த என்னுடைய ஒரு நீண்ட போராட்டம் இருக்கு, அதை நினைத்து அழுதாங்க, அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போனால் ரிலாக்ஸா உணர வைக்கிற ஒரு இடமாக வீடு எல்லாருக்கும் அமைய வேண்டும். எனக்கு அப்படி ஒரு பார்ட்னர் அமைந்திருப்பது பாக்கியம் தான்.
ஜோ படத்தின் கதை கேட்டு முடித்ததுமே சித்துகுமார் தான் இசையமைப்பாளராக இந்த படத்திற்கு இருக்க வேண்டும் என்பது நான் கேட்டுக்கொண்டது. குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே சித்துகுமாரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தோடு மிகவும் திறமையானவருக்கு ஜோ படத்தின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.