இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு திட்டமிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய ஜீத்து ஜோசப், மிகக் குறுகிய காலத்திலேயே படத்தின் பணிகளை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, 'த்ரிஷ்யம் 2' படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'த்ரிஷ்யம் 3' உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்த நிலையில், முதல்முறையாக இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில், "‘த்ரிஷ்யம்’ எடுத்து முடிக்கும்போது ‘த்ரிஷ்யம் 2’ உருவாகும் என நினைக்கவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியபோது, இரண்டாம் பாகத்துக்கான கதை சாத்தியமானது. அதுபோல, ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகம் குறித்து என்னால் தற்போது வாக்குறுதி தர இயலாது. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் மூன்றாம் பாகம் எடுப்பேன். கண்டிப்பாக லாப நோக்கத்திற்காக அந்த முயற்சியில் இறங்கமாட்டேன். மூன்றாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் காட்சியை இப்போதே யோசித்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொன்னபோது அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமானால் அதற்கான சிறப்பான கதையை உருவாக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்வேன். சரியாக வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுவேன்'' எனக் கூறினார்.