எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர், கீரா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'இரும்பன்'. இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க லெமுரியா மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இன்று (10.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதனிடையே இப்படத்தின் இயக்குநர் கீரா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கதை, திரைக்கதை, வசனம் போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் முழு பணத்தை கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்காமல் திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென குறிப்பிட்டு கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.புவனேஸ்வரி, இயக்குநருக்கு கொடுக்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மூன்று நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்த வேண்டும். தவறினால் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். அடுத்த கட்ட விசாரணையை வருகிற 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் அதில் இயக்குநர் பெயர் சிறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்த இயக்குநர் கீரா, "இந்த படத்தின் இயக்குநர் யார்... கண்டுபிடித்து சொல்லுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். மற்றொரு பதிவில் ‘இப்படத்தின் முன்காண் காட்சிக்கு என்னைக் கூப்பிடவும் இல்லை; என் பெயரையும் போடவில்லை.’ எனக் குற்றம் சாட்டியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.