பேட்மேன், ஸ்பைடர் மேன், சூப்பர்மேன், போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையில் 2008ல் வெளியான படம் 'அயன்மேன்'. படத்தின் ஹீரோ ராபர்ட் டோவ்னி ஜூனியர் பிரத்யேகமாக செய்யப்பட்ட அயன்மேன் உடையை அணிந்து அவர் செய்யும் சாகசங்கள் குழந்தைகளையும், இளைஞர்களையும் மிகவும் கவர்ந்தது. ஜோன் பேவ்ரியூ இயக்கிய இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அயன்மேன் படத்தின் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி அதுவும் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த பாகங்களில் புதியதாக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக அயன்மேன் உடைகள் பயன்படுத்தியிருந்தது படத்திற்கு கூடுதல் அம்சமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் அயன்மேன் அணிந்திருந்த உடையை அமெரிக்காவில் உள்ள திரைப்பட பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர். தற்போது அந்த உடை துருதிஷ்டவசமாக திடீரென்று காணாமல் போய்விட்டது. இதனால் படக்குழுவினரும், அயன்மேன் ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீரென்று மாயமான உடையின் இந்திய மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும். இந்த உடையை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.