கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு இசையை வெளியிட்ட இசைஞானி இளையராஜா பேசியபோது.... "பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்" என்றார்.