இளையராஜா தனது இசையின் மூலம் எண்ணற்ற மனங்களை வென்ற நிலையில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே இன்றளவும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். கடந்த வருடம் கும்பகோணத்தில் இசைக் கச்சேரியை நடத்திய அவர், அதில் கலந்து கொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும் இசை கச்சேரி நடத்தவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் திருநெல்வேலியில் இசைக் கச்சேரி நடத்தினார். ரெட்டியார்பட்டி பகுதியில் நடந்த இந்த இசைக் கச்சேரியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், நெல்லை மக்களுக்கு நன்றி தெரிவித்து ஒவ்வொரு ஊர்களிலும் விரைவில் எனது இசை கச்சேரி நடைபெறும் என்றும் அடுத்து எந்த ஊர் என்றும் கேள்வி கேட்டிருந்தார். இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் அவரவர்களின் ஊர்களின் பெயர்களை கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இளையராஜா அடுத்து எந்தெந்த ஊர்களில் இசை கச்சேரி நடக்கவுள்ளது குறித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.