இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள்.