கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'டாணாக்காரன்'. காவல் துறையில் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை பேசும் படமாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த 'போஸ் வெங்கட்' அவர்களை நக்கீரன் ஸ்டுடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் 'டாணாக்காரன்' படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
இந்த படத்தின் இயக்குநர் தமிழ் எனக்கு 15 வருடங்களாக தெரியும், என் நெருங்கிய சகோதரர். டாணாக்காரன் படத்தின் கதையை பத்து வருடத்திற்கு முன்பே கேட்டு விட்டேன். படத்தின் பணிகள் முடிந்தும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர். சகோதரர் தமிழ் படம் பண்ணும் போது என்னை அழைப்பார் என்று எனக்கு தெரியாது. படம் ஆரம்பித்து வேலைகள் நடந்துகொண்டு இருந்தது. நானும் வாழ்த்துக்கள் சொன்னேன். அவரும் நன்றி கூறினார். ஆனால் நான் படத்தில் இருக்கிறேன் என்று அவர் எதுவும் சொல்லவில்லை. தமிழ் நல்லா வரணும் என்கிற ஆசை மற்றும் தமிழ் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கிற நபர் நான். நான் 'கன்னி மாடம்' படம் முடித்து விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த நேரம். கொடைக்கானல் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஹில்ஸ் விட்டு இறங்கின உடனே எனக்கு வந்த முதல் அழைப்பு தமிழ் சாரிடம் இருந்து தான். 'அண்ணே... படத்தில் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கு. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார்'. நான் இவ்ளோ தாமதமாக அழைக்கிறீர்களே என்றேன்.
நேரில் வாருங்கள் அண்ணா பேசுவோம் என்றார். நேரில் வந்தவுடன் இது ஒரு நல்ல கதாபாத்திரம், கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தேடிட்டு இருந்தோம். நான் தான் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு குழுவிடம் வலுக்கட்டாயமாகச் சொன்னேன் என்றார். சரி நான் நடிக்கிறேன் என்று வந்து நடித்து கொடுத்த படம் தான் 'டாணாக்காரன். சமீபத்தில் தான் படத்தைப் பார்த்தேன். விக்ரம் பிரபு சார் குடும்பத்திற்காகச் சிறப்பு காட்சி போடப்பட்டது. அதில் அமர்ந்து தான் பார்த்தேன். பார்த்து முடித்த பிறகு விக்ரம் பிரபு சார் மற்றும் தமிழை கட்டிப்பிடித்து விட்டேன் கண்களில் கொஞ்சம் கண்ணீர் இருந்தது. பிறகு வரும்போது தமிழ் கைகளை அழுத்தி பிடித்து ஒரு வார்த்தை சொன்னேன். என்னிடம் பல பேட்டிகளில் உங்களுக்கு திருப்தியான படம் ஒன்று சொல்லுங்கள் என்று கேட்பார்கள். நான் இது வரைக்கும் சொன்னதில்லை இனிமே சொல்கிறேன் எனக்கு மிகவும் திருப்தியான திரைப்படம் 'டாணாக்காரன்' என தெரிவித்தார்.