Skip to main content

'ஹிப் ஹாப் தமிழா' என்பது நான் மட்டுமல்ல...' - 'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியானது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் 'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது...

zc

 

''நான் சிரித்தால்' படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு எது சரி, எது தவறு என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படிதான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது. அதேபோல் ‘எரும சாணி’ விஜய்யையும் சென்னையில் வாய்ப்பு நிறைய இருக்கிறது வா என்று அழைத்தேன். இன்று ஒரு படத்தில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது எதிர்காலத்திலும் தொடரும்.

 

 

கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் நேராக கூறிவிடுவார். இப்படத்தில் அவர் தூணாக இருந்தார். படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெற செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா’ கோபிக்கு கெமிஸ்ரி பேசும்படியாக வந்திருக்கிறது. ராஜ்மோகனின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கதிர் கடின உழைப்பாளி. அவருடைய திறமைக்கு விரைவிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி. ‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு. ஐஸ்வர்யா மேனன் ‘பிரேக் அப்’ பாடலில் காலணி கூட இல்லாமல் சிறப்பாக நடனமாடினார். அதேபோல், நேரம் தவறாமைக்கு ஐஸ்வர்யா மேனன் சிறந்த உதாரணம். எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்