டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் ஒன்று பேட்மேன் கதாபாத்திரம். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரம் 2005ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான பேட்மேன் பிகன்ஸ் படத்தின் மூலம் மிகவும் ஃபேமஸானது.
1940ஆம் ஆண்டிலிருந்து திரையில் வலம் வந்தாலும் அப்போதெல்லாம் சூப்பர்மேன் கதாபாத்திரத்திற்குதான் ரசிகர்கள் ஏராளம் இருந்தனர்.
2008ஆம் ஆண்டு வெளியான தி டார்க் நைட் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றது இதன் தொடர்ச்சியாக தி டார்க் நைட் ரைஸஸ் படம் வெளியானது. இந்த மூன்று படங்களிலும் பேட்மேனாக நடித்தவர் கிறிஸ்டியன் பேல்.
டிசி நிறுவனம் பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை ஜாக் ஸ்னைடரிடம் ஒப்படைத்தது. அவர் இயக்கிய பேட்மேன் vs சூப்பர்மேன், ஜஸ்டீஸ் லீக் உள்ளிட்ட படங்களில் பென் அஃப்லெக் என்பவரை பேட்மேனாக நடிக்க வைத்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பேட்மேன் கதாபாத்திரமும் இவர் நடித்த படங்களில் பேசப்படவில்லை. கிறிஸ்டியன் பேல், நோலன் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.
தற்போது பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை டிசி காமிக்ஸ் நிறுவனம் ‘பிளேனட் ஆஃப் தி ஏப்ஸ்’ படங்களை இயக்கிய மேட் ரீவ்ஸிடம் ஒப்படைத்துள்ளது.
அந்த வகையில், 2021-ம் ஆண்டு வெளியாகவுள்ள புதிய பேட்மேன் படத்தில், ‘டிவ்விலைட்’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சனை, பேட்மேனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சில தினங்களுக்க முன் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பேட்மேன் படங்களைத் தொடர்ந்து தயாரித்துவரும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம், அடுத்த பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படம், 2021ஆம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.