தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீசர் கதாநாயகன் யாஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. 'கே.ஜி.எஃப் 2' டீசர் இதுவரை 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த டீசரில் ஒரு பெரிய துப்பாக்கியால் ஜீப்புகளைச் சுட்ட பின்பு முழுமையாகக் குண்டுகள் காலியானவுடன் அந்தத் துப்பாக்கியின் முனையில் ஏற்பட்ட கங்கில் சிகரெட்டைப் பற்றவைப்பார் யாஷ். இந்தக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த காட்சிக்கு கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5-வது பிரிவை மீறிய செயல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்த டீசரை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காட்சி குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'கே.ஜி.எஃப் 2' படத்தில் இந்தக் காட்சிகள் இடம் பெறலாம் என்றும், ஆனால் அந்தக் காட்சிகளில் புகையிலை எச்சரிக்கை வாசகம் வர வேண்டும் என்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் ஈடுபடுவோரிடம் தாங்கள் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும் இது தொடர்பான கடிதத்தை இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் யாஷ், தயாரிப்பாளர் விஜய் கிராகண்டூர் ஆகியோருக்கு சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.