சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தை சுதா கொங்காரா இயக்க, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முதலில் இப்படத்தை திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென சூர்யா படத்தினை அமேசான் ப்ரைமில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளராக அவர் எடுத்துள்ள இந்த முடிவை மற்றவர்கள், அவரது ரசிகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்கு வைத்திருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்திலிருந்து பலருக்கு உதவி செய்ய பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு திரையுலகை சேர்ந்த பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் ஹரி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்...
ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல.
நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.
சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கு, உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்" என கூறியுள்ளார்.