அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்-பேட்-அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேணி இயக்கி வரும் நிலையில் லைகா தயாரிக்க த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு அடுத்த படமாக உருவாகி வரும் குட்-பேட்-அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அப்டேட் குறித்து சென்னையில் நடந்த புஷ்பா 2 நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர், இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளராக பணியாற்றி வந்த தேவி ஸ்ரீ பிரசாத் சில காரணங்களால் வெளியேற்றப்பட்டதாகவும் அவருக்கு பதில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே பாடல்கள் அமைத்துவிட்டதாகவும் பின்னணி இசையை மட்டும் ஜி.வி.பிரகாஷ் கவனிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து சமீபத்தில் வெளியான கங்குவா படம், கலவையான விமர்சனத்தை சந்தித்தது. அதில் ஒன்றாக படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதன் எதிரொலியாகக் கூட குட்-பேட்-அக்லி படத்தில் மாற்றம் செய்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி.இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படத்துக்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். அதே வேளையில் ஜி.வி.பிரகாஷ் குட்-பேட்-அக்லி படத்துக்கு இசையமைப்பது உறுதியாகும் பட்சத்தில் கிரிடம் படத்துக்கு பிறகு 17ஆண்டுகள் கழித்து அஜித் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக படக்குழு விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.