பாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகர் கோவிந்தா. நகைச்சுவை கலந்து கதாபாத்திரத்திலும் தனது நடனம் மூலமும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். தமிழில் ரம்பா, ஜோதிகா, லைலா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ‘த்ரீ ரோஸஸ்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்ட அவர், 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின்பு இந்தாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் கோவிந்தா, இன்று கொல்கத்தாவிற்கு செல்வதற்காக அதிகாலையிலே எழுந்து கிளம்பியுள்ளார். அப்போது 4.45 மணிக்கு தனது உரிமம் பெற்றத் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி கீழே விழுந்து வெடித்துள்ளது. அதில் தோட்டா கோவிந்தாவின் காலில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலில் பாய்ந்த தோட்ட வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மேலாளர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.