நடிப்பு, ஒளிப்பதிவு, சட்டம், அரசியல் எனப் பல துறைகளில் இயங்கி வருபவரும் கவிஞர் கண்ணதாசனின் மகனுமான கோபி கண்ணதாசனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் கண்ணதாசன் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”கவிஞரும் கலைஞரும் 16 வயதிலிருந்தே ஒரே ஸ்டூடியோவில் வேலை பார்த்தவர்கள். அங்கேயே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. பராசக்தி படத்தில் கவிஞரை பாடல் எழுத வைக்க வேண்டும் என்று கலைஞர் முயற்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டதாம். பராசக்தி படத்தில் ஏதாவது ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோர்ட் சீனில் கவிஞரை ஜட்ஜாக உட்காரவைத்தார். எப்போதுமே ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருப்பது சாத்தியமில்லை. அதனால் இருவரும் அரசியலில் ஒன்றாக பயணிக்க முடியாமல் போனது.
மூன்று வருடத்தில் அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டு முழு நேரமாக எழுத்துப்பணிக்கு கவிஞர் திரும்பியதைத்தான் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். அரசியலில் தொடர்ந்து பயணித்திருந்தால் அவர் எப்படியும் தோற்றிருப்பார். கட்சி அரசியலுக்குள் அவரால் தாக்குப்பிடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதேபோல இவ்வளவு படைப்புகள் நமக்கு கிடைத்திருக்காது. அரசியலில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கே செலவு செய்தவர்கள் மிகக்குறைவு. சிலர் அரசியலில் சம்பாதித்து அந்தப் பணத்தை வைத்து சினிமா எடுத்தார்கள். ஆனால், சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவு செய்தவர் கவிஞர் கண்ணதாசன்”.