ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் கௌதமன், பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பிக்பாஸ் மதுமிதா, “ஞானச்செறுக்கு படத்தின் முன்னோட்டத்திற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. சந்தானம் ஐயாவை நேரில் பார்க்கின்ற பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லை என நினைக்கும்போது மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகிறேன். இதுபோன்ற சிறிய தொகையில் எடுக்கப்பட்ட படங்கள் பல நூறு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், ஹை பட்ஜெட்டில் எடுக்கும் படங்களை தவிர்த்து, ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கும் நிறைய படங்கள் மிகுந்த தரம் வாய்ந்த படங்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நெடுநல்வாடை, ஒத்தச்செருப்பு, சில்லுக்கருப்பட்டி இப்படி தரமாக எடுக்கின்ற படங்களுக்கு தேவையான திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதேபோல இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் அடுத்து படம் எடுக்கும் அளவிற்கு நிறைய வசூல் செய்து லாபம் அடைவதும் கிடையாது. இதற்கு என்ன காரணம் என்பதை கட்டாயமாக தமிழக அரசும், தயாரிப்பாளர் சங்கமும் ஆராய்ந்து அதை நிறைவேற்ற வேண்டும்.
ஹிந்தியாக இருக்கட்டும் தெலுங்காக இருக்கட்டும் அங்கு லோ பட்ஜெட், ஹை பட்ஜெட் என்கிற வித்தியாசமே கிடையாது. படத்தின் கதைக்களம் தரமாக இருந்தால் அது சூப்பர் டூப்பர் ஹிட்தான். ஆனால், தமிழகத்தில் வெளியாகும் தரமான படங்களை எப்படி மக்களுக்கு எடுத்து செல்கிறோம். அவர்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் அது மக்களுக்கு செல்லாமல், நிறைய பேர் அதை பார்க்கமுடியாமல் போகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பில் எனக்கு நிறைய கடன் இருக்கிறது என்று தெரிவித்த தயாரிப்பாளர் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் நான் நிறைய படங்கள் இயக்கப்போகிறேன், தயாரிக்க போகிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த ஞானச்செருக்கு படத்தின் மூலமாக எனக்கு லாபம் கிடைத்தது என்று வியாபார ரீதியாக இந்த டீம் வெற்றியடைய வேண்டும்” என்றார்.