Skip to main content

"லஞ்சம் வாங்குனா கொல்லணும்னு படம் எடுத்த டைரக்டர் என்கிட்டே என்ன கேட்டார் தெரியுமா?" - EX. IAS அதிகாரி ஞானராஜசேகரன் பேச்சு 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Gnana Rajasekaran

 

முதல் மொழி சித்திரைத் திருவிழா என்ற இலக்கிய நிகழ்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானராஜசேகரன் பேசுகையில்,

 

"நான் சென்சார் போர்டில் கொஞ்ச நாள் பணியாற்றினேன். தமிழ் சினிமாவில் நேர்மை, ஊழலுக்கு எதிராக பேசுதல், லஞ்சம் வாங்கினால் அவனைக் கொலை செய்யலாம் என்றெல்லாம் படம் எடுக்கிறார்கள். ஆனால், இந்த சினிமாக்காரர்கள் கட் இல்லாமல் சான்றிதழ் வாங்க சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். சினிமாக்காரன் சென்சார் போர்டு, இன்கம் டேக்ஸ் என இரண்டு கவர்மெண்ட் ஏஜென்சிகளை மட்டும்தான் சந்திக்கிறான். இந்த இரண்டு ஏஜென்சிகளையும் அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்று பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. லஞ்சம் வாங்குவது மாபெரும் குற்றம். லஞ்சம் வாங்கினால் கொலையே செய்யலாம் என்று படமெடுத்த இயக்குநர், வேறொருவர் மூலமாக 'நம்ம படத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா சார்' என்று என்னை அணுகினார்.

 

படத்தில் ஒன்று பேசுகிறார்கள், நேரில் வேறு மாதிரி இருக்கிறார்கள். எல்லோரும் இரட்டை வேடம்தான். தீபாவளி நேரத்தில் எட்டு படங்கள் ரிலீசாகும். கடைசி நேரத்தில்தான் சென்சாருக்கு படத்தை கொண்டுவருவார்கள். அந்த நேரத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் பார்க்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை கூட படம் பார்ப்போம். ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிவரை படம் பார்த்து சென்சார் சர்டிஃபிகேட் கொடுத்துக்கொண்டிருந்தோம். 

 

12 மணிக்கு கடைசி சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் எல்லா தயாரிப்பாளர்களும் வெளியே காத்திருக்கிறார்கள். மதியமே சர்டிஃபிகேட் வாங்கியவர்கூட வெளியே காத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் உட்கார்ந்து படம் பார்க்கிறார் என்றால் அவர் இவ்வளவு லஞ்சம் எதிர்பார்ப்பார் என்று அவர்களாகவே நினைத்து எனக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வெளியே காத்திருக்கிறார்கள். வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது, எல்லோரும் வெளியே இருப்பதை பார்த்து சரி இன்னும் கொஞ்ச நேரம் இவர்கள் நிற்கட்டும் என்று நான் மீண்டும் உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன்.

 

லஞ்சம் வாங்காதவர்களைக்கூட இவர்கள் லஞ்சம் வாங்க வைத்துவிடுவார்கள். அவர்கள் வெளியே காத்திருப்பதை எஞ்ஜாய் பண்ணேன். இது மாதிரியான எஞ்ஜாய்மெண்டை நான் நிறையவே செய்திருக்கிறேன். பின், அவர்களை அழைத்து இதுக்கு எந்தவிதமான காசும் நீங்க எனக்கு கொடுக்க வேண்டியதில்லை. இது என்னோட கடமை, நீங்கள் போகலாம் என்று அனுப்பிவைத்தேன். ஒரு நேர்மையானவனை ஊழல்வாதியாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் இது போன்று ஏராளமாக உள்ளன". இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்