இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அதர்வாவும் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், படக்குழுவினரை வாழ்த்தினார். பின்பு அவரது அம்மாவை மேடை ஏற்றி மகிழ்ந்தார். அடுத்து விழாவிற்கு வருகை தந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆகாஷுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். இந்த ஆடிட்டோரியம் வரும் போது ஒரு சின்ன வைப் இருந்தது. அதை அப்படியே நான் புடிச்சுக்கிறேன். அதை ஆகாஷுக்கு ஒரே லைன்ல சொல்றேன்” என சொல்லி பிகில் படத்தில் விஜய் கூறும் வசனத்தை போல், “கப்பு முக்கியம்டா தம்பி” என்று சொல்லி வாழ்த்தினார்.