இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து ‘தொலஞ்ச மனசு...’ லிரிக் வீடியோவும் ’சோலோ வயலின்’ வீடியோ பாடலும் வெளியாகியிருந்தது. மேலும் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதை பார்க்கையில், காதலராக இருக்கும் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர், ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். அதே சமயம் அதிதி ஷங்கர் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து விடைபெற ஆகாஷ் முரளியை அழைப்பது போலவும் அதற்காக ஆகாஷ் முரளி முயலும் போது என்ன நடக்கிறது இறுதியில் அவர் அதிதி ஷங்கரை காப்பாற்றினாரா இல்லையா, மீண்டும் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்ற கேள்வியை ட்ரைலர் எழுப்புகிறது.
இதற்கு பதில் சொல்லும் வகையில் காதலை பின்னனியாகக் கொண்டு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது.