சென்னையில் நடந்த ‘மேகத்தில் ஒன்றாய் நின்றோமே’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கங்கை அமரன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா பற்றியும் பாஜகவில் சேர்ந்தது குறித்தும் திமுகவில் சேரப்போகிறீர்களா என்றும் கேள்விகள் முன் வைக்கப்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பல்வேறு திரைப் பிரபலங்கள் கூறி வருகிற கருத்துக்களுக்கு தங்களுடைய கருத்து என்னவென்று கேள்விகள் கேட்கப்பட்டது. கலவையான கேள்விகளுக்கு அவரது பதில் பின்வருமாறு...
ஒரே கங்கை அமரன் தான் இந்த ஜென்மத்தில் சேர்ந்தது ஒரே கட்சியில்தான். அந்த கட்சியில் தான் உயிர் போகுற வரை இருப்பேன். நம்மை நாமே உணர்வதால், நான் கத்துவதால் எந்த பயனும் இல்லை என்று இனிமேல் அமைதியாகவே போய்விடுவேன். தனியார் ஊடகங்களின் பேட்டியின் போது என்னை அவதூறாகப் பேசியதால் கோவப்பட்டேன். கோவம் வர வேண்டிய இடத்தில் வந்தால்தான் மனிதன். சசிகலா சொத்து குவிப்பு வழக்கிற்காகத்தான் தண்டனை அனுபவித்து வந்துவிட்டார்கள் அவர்கள் குறித்து பேச வேறு ஒன்றுமில்லை.
கலைஞர் உயிருடன் இருந்தபோது அந்த குடும்பத்திற்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. தொடர்பு, உறவு என்பது வேறு கட்சி என்பது வேறு. மற்றபடி நான் எப்போதும் திமுகவில் இருந்ததில்லை. இனி சேரப்போவதுமில்லை. தெய்வீக நம்பிக்கை அதிகம் என்பதால் அதை சார்ந்த கட்சியான பாஜகவில் இருக்கிறேன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் இனி இவருக்குத்தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏன் இருக்குறவங்க பட்டத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். இல்லாதவங்க பட்டத்தை எடுத்துக்கங்களேன். புரட்சித்தலைவர், நடிகர் திலகம் எல்லாம் இப்போது இல்லை. அந்த பட்டத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்களேன் பார்க்கலாம் என்று அவருக்கே உரித்தான மாடுலேசனில் பேசினார்.