தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (12.02.2024) காலை சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ’மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார், உங்களது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. ஏற்கெனவே ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அதிருப்தி பதிவுகளை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#RNRavi
— pcsreeramISC (@pcsreeram) February 12, 2024
Sorry sir your behavior is not acceptable.
Why do Governors in non Bjp ruled states behave like spoilt brats.