‘ஆன்டி இண்டியன்’,‘உயிர் தமிழுக்கு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆதம் பாவா. இதில் உயிர் தமிழுக்கு படத்தை இயக்கியும் உள்ளார். இவரை நமது நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்தும், சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
ஆதம் பாவா பேசுகையில் “ரசிகர்களின் ரசனை உலகத்தரத்தில் உள்ளது. அவர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால் சின்ன படங்கள் தியேட்டரில் வருவதில்லை. சின்ன படங்கள் சிறந்த படமாக இருந்தால் மட்டும்தான் தியேட்டருக்கு அவர்கள் வருகிறார்கள். ஒரு முறை பார்க்கலாம் என்ற படங்களுக்கெல்லாம் அவர்கள் வருவதில்லை. அது மிகப்பெரிய பாதிப்பாக தயாரிப்பாளர்களுக்கு அமைந்துள்ளது. நான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு மானாமதுரை சென்றபோது ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியான 2ஆம் நாள் வெறும் 9 பேர் மட்டும்தான் இருந்தார்கள். கமல் - சங்கர் கூட்டணியில் ரெட் ஜெயண்ட் பேனரில் வந்தால் கூட 4 வாரம் கழித்து ஓ.டி.டி.-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று பார்வையாளர்கள் நினைப்பது ஆபத்தான சூழல். அதனால்தான் தயாரிப்பாளர்கள் 8 வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி.-யில் திரைப்படத்தை வெளியிட சொல்கிறார்கள். என்னை கேட்டால் ஒடிடி-க்கு படமே கொடுக்கக் கூடாது.
சேட்டிலைட் வருமானம் போக இப்போது ஓ.டி.டி. வந்துள்ளது எனக் கொண்டாடினார்கள். ஆனால் இப்போது ஓ.டி.டி. தளங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து 4ஆக மாறிவிட்டது. திரையரங்கில் படம் வெளியாகி ஹிட் ஆனால்தான் இப்போது ஓ.டி.டி.-யில் வாங்குகிறார்கள். அதிலும் நடிகர்கள் யார் டெக்னீசியன் யார் எனத் தெரிந்துகொண்டு தரம் பார்த்து வாங்குகிறார்கள். முன்பு இந்தியில் டப் செய்யும்போது அதில் ஒரு உரிமம் இருக்கும். இப்போது ஓ.டி.டி. வந்த பிறகு இந்தி உரிமத்தையும் காலி செய்துவிட்டது. சேட்டிலைட் உரிமத்தையும் காலி செய்து கடைசியில் தியேட்டரும் காலி ஆகிவிட்டது. அந்த காலத்தில் படம் பார்க்கும்போது இடைவேளையில் ஏ.சி.யை ஆஃப் செய்து விடுவார்கள். இன்றைக்கு அப்படி யாரும் பண்ணுவதில்லை. தியேட்டரின் தரத்தை மெயிண்டெயின் பண்ண வேண்டியுள்ளது. இது எல்லாமே ஆடியன்ஸ் தலையில் விழுவதால், நிறையச் செலவு பண்ணி ஏன் வரவேண்டும்? என்று மாஸ் ஹீரோ படங்களுக்கு மட்டும் செலிபிரேட் பண்ணிவிட்டு சின்ன படங்களை ஓ.டி.டி.-யில் பார்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இன்றைக்கு வீட்டிலிருக்கும் டி.வியே பல்லி மாதிரிதான் இருக்கிறது. அதிலும் விளம்பரம் வருவதால் அதிலும் ஓ.டி.டி. தளங்களை இணைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் எங்குப் போவார்கள்.
ஹீரோக்கு கதை என்றால் அவர் 100 கோடி கேட்டாலும் நீங்கள் கொடுக்க வேண்டும். கதைக்கு ஹீரோ என்றால் உங்களுக்கு அது தேவையில்லை. இதை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் அவர் இல்லாமல் ஒரு புது முகம் பண்ணினால் கம்மியான பட்ஜெட்டில் எடுத்து முடித்துவிடலாம். விஜய் சேதுபதி அவரின் 50வது படம் என்பதால் பெரிய தயாரிப்பாளர்களிடம் சென்றிருக்கலாம். ஆனால் அவர் கதையை நம்பி வந்தார். அதுபோல கதையை நம்பி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் திரும்பினால் இந்த பிரச்சனைகள் வராது. இது தயாரிப்பாளர் மேல் உள்ள குற்றச்சாட்டு. நடிகர்களா வந்து படம் பண்ணுகிறார்கள்? தயாரிப்பாளர்கள்தான் அவர்களிடம் டேட் கேட்கிறார்கள். நடிகர்கள் ரெட் கார்டு பஞ்சாயத்து வரக் காரணம் என்னவென்றால் அவர்கள் யார் அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். பணம் கொடுத்த பிறகு தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியரை தேடுவார்கள். அட்வான்ஸை இந்த ஆகஸ்ட்டில் கொடுத்துவிட்டு அடுத்த ஆகஸ்ட் வரை படம் எடுக்க ஃபைனான்சியரை தேடுவார்கள். பிறகு இவர்கள் நடிகர்களிடம் வரும்போது அவர்கள், நான் டேட் கொடுத்தேன் நீங்கள்தான் வரவில்லை என்பார்கள். அப்படிதான் தயாரிப்பாளர் கவுன்சில் வரை இந்த பிரச்சனை போகும். இன்றைக்கு தனுஷுக்கு ரெட் கார்டு கொடுத்ததைப் பேசுகிறோம் ஏன் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுத்து அவர் நடிக்காமல் இருந்தாரா. வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள் அவரும் நடிக்காமல் இருந்தாரா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் படப்பிடிப்பு நிறுத்தம் விவகாரத்தில் தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசுவார்கள். ஆனால் நடிகர்களுக்குக் கொடுக்கும் பணத்தை ஒப்பிடும்போது தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் காசு ஒன்னுமே கிடையாது. ஒரு கேரவேனுக்கு கொடுக்கும் காசை பேட்டாவாகத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பார்கள். ஆனால் தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசுவார்கள். தொழிலாளர்களுக்குப் பெரிய பேச்சு வார்த்தை நடத்தி போராடி ரூ.200 சம்பளத்தை அதிகப்படுத்தலாம். ஆனால், நடிகர்களின் சம்பளமான ரூ.100 கோடிக்கு குறையாது. விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் அவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை உள்ளது. அவருக்கு தேவையான நேரத்தில் காமெடி பண்ணுவார், கட்சி தொடங்குவார் எல்லாம் பண்ணுவார். 50 ஆண்டு காலங்களில் நடிகர் சங்கத்திலிருந்துதான் முதலமைச்சர் வந்துள்ளனர். அவர்களால் ஒரு கட்டடம் கட்ட முடியாதா? சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி, 1000 கோடி, 2000 கோடி எனப் பேசுகிறார்கள். ஏன் 100கோடிக்குக் கட்டடம் கட்ட முடியவில்லை? நான் முன்னணி நடிகராக இருந்தால் சொந்த செலவில் கட்டிக்கொடுத்திருப்பேன். அசிங்கமாக இல்லை இவர்களுக்கு. இவர்கள்தான் மக்களுக்கு வந்து நல்லது செய்யப்போகிறார்களா? நடிகர்கள் என்பது ரிமோர்ட் பட்டனை அழுத்தினால் டிவியில் டான்ஸ் ஆடுகிறவர்கள்தான். அரை மணிநேரம் பார்த்த பிறகு, சலிப்பாகி விட்டால் ஆஃப் செய்து விடனும். இந்த அளவிற்குத்தான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” என்றார்.