எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.
அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
Felt a freaking earthquake in Japan just now!!!
Was on the 28th floor and slowly the ground started to move and took us a while to realise it was an earthquake. I was just about to panic but all the Japanese around did not budge as if it just started to rain!! 😅😅😅😅😅… pic.twitter.com/7rXhrWSx3D— S S Karthikeya (@ssk1122) March 21, 2024