2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கூடிய விரைவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் என்னென்ன படங்களெல்லாம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தது. அதனால் பரிந்துரைகளை பார்த்தேன். நான் பார்த்த படங்கள் ஒரு சில இடம் பிடித்திருந்தன. அதில் 1917, ஜோஜோ ராபிட், லிட்டில் விமன் ஆகிய மூன்று படங்களை மட்டும் பார்க்காமல் இருந்தேன். 1917 படம் தற்போதுதான் இந்தியாவில் வெளியாகிறது என்ற செய்தி குதூகலிக்க வைத்தது. விரைந்து சென்று ஐமாக்ஸில் இப்படத்தை பார்த்தேன். படம் பார்க்கப் போவதற்கு முன்பே 1917 படம் குறித்து இணையத்தில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். முதன் முறையாக ஒரு போர் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதுபோல காட்சியமைக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயமே என்னை முதலில் படம் பார்க்கத் தூண்டியது. மேலும் ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவில், ஸ்பெக்டர் படத்தை இயக்கிய சாம் மெண்டஸ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியிருந்தது என்பதும் கூடுதல் அட்ராக்க்ஷன். இது மட்டுமில்லை, சுமார் 10 ஆஸ்கர் விருதுகளுக்காக 1917 படம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. உலக திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல விருதுகளை வாரிக்குவித்திருக்கிறது... இப்படி உச்சபச்ச எதிர்பார்ப்புடன் படத்திற்கு சென்றேன்.

நேரடியா இந்தப் படத்தோட கதைக்கு போய்டுவோம்... 1917 படத்தின் கதை ஒன்றும் யாரும் யோசித்திடாத, யாரும் எதிர்பார்க்காத கதை என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாது. ரொம்பவும் சிம்பிளான ஒரு கதைதான் இது. முதலாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஜெர்மனியின் பகுதிக்குள் சென்றிருக்கும் இரண்டாம் பட்டாலியன், அடுத்த நாள் காலையில் ஜெர்மனி மீது தாக்குதல் நடத்த இருக்கின்றனர். ஆனால், அப்படி தாக்குதல் நடத்தினால் ஜெர்மனியின் சதிவேலையில் சிக்கி, இரண்டாம் பட்டாலியனில் இருக்கும் 1600 வீரர்களையும் இழந்துவிடும் இங்கிலாந்து. அதனால் ஜெனரல் எரின்மோர், இரண்டாம் பட்டாலியன் தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருக்கும் இடத்திற்கு தன் பட்டாலியனில் இருக்கும் இரண்டு சிப்பாய்களை அனுப்பி கலோனல் மெக்கன்சியிடம் தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற மெசேஜை தெரிவிக்க ஆணையிடுகிறார். அனுப்பி வைக்கப்படும் இரண்டு சிப்பாய்களில் ஒருவனின் அண்ணன் இரண்டாம் பட்டாலியனில் லெட்டினன்டாக இருப்பார். அவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தம்பி பிளேக் எதைப்பற்றியும் யோசிக்காமல் இந்த மிஷனை நிறைவேற்றச் செல்வான். செல்லும் பாதைதான் கதை.
இயக்குனர் சாம் மெண்டஸின் தாத்தா முதலாம் உலகப்போரில் பணியாற்றியவர். அவர் சாம் மெண்டஸ் சிறு குழந்தையாக இருந்தபோது தன்னுடைய அனுபவத்தை கதையாகச் சொல்லியுள்ளார். இதை வைத்துதான் இந்தப் படத்திற்கு கதை எழுதி, இயக்கியிருக்கிறார் சாம். இந்தப் படம் உலகம் முழுவதும் கலந்துகொண்ட விருது விழாக்களில் பார்த்தவர்களை கவர முதல் காரணம், படம் தரும் ரோலர் கோஸ்டர் உணர்வுதான் என்று சொல்வேன். படம் தொடங்கியபோது நகரத் தொடங்கிய கேமரா படம் முடியும் வரை நகர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது தேவையான இடங்களில் மட்டும் கேமரா ஸ்டடியாக இருக்கிறது. யாருமில்லாத, நிலத்தின் மீது கொட்டித் தீர்ந்திருக்கும் வெடி குண்டுகளுக்கு மத்தியிலே, பிணங்களுக்கு நடுவே இரண்டு சிப்பாய்கள் பயந்து பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனி படை வீரர்கள் தங்களின் இடத்தை சும்மா விட்டுச் செல்லாமல் தங்களை தேடி வரும் எதிரி நாட்டு சிப்பாய்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பொறி வைத்திருக்கிறார்கள். பேய் படங்களில் ஒரு மௌனம் வந்தால் எங்கே பயமுறுத்தப்போகிறார்கள் என்ற அச்சம் எப்படி நம்மை தொற்றிக்கொள்ளுமோ அதேபோல இந்தப் படத்தில் காட்சி மௌனமானால் படத்தை பார்க்கும் நமக்கு ஒரு அச்சம் தொற்றிக்கொள்கிறது. திடீரென நடக்கும் அசம்பாவிதங்கள் படபடப்பை கொடுக்கின்றன. தியேட்டரே அலறுகிறது. அதேபோல கேமரா மீது இப்படத்தின் பின்னணி இசை சவாரி செய்ததுபோல பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள். பின்னணி இசை குறையும் இடத்தில் சவுண்ட் எஃபக்ட்ஸ் எழுந்து நிற்கிறது. இதைத் தாண்டி படம் தரும் அனுபவத்தை விவரிப்பது வெற்றி பெறாத முயற்சியாகவே இருக்கும். படத்தை பாருங்கள், புரியும்.

ரோஜர் டீக்கின்ஸ், எப்படி இந்த சவாலை இவ்வளவு கச்சிதமாக செய்துமுடித்தார் என்று காட்ட பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றுகின்றன. அதையெல்லாம் பார்த்தால் நமக்கு இன்னும் தொழில்நுட்ப ரீதியாக அறிவும் வளரும். ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலிப்பதிவு போன்றவை நம்மை எவ்வளவு கவர்ந்ததோ அவற்றையெல்லாம் தாண்டி படத்தின் ஆர்ட் டிபார்ட்மெண்ட் வேலை நம்மை கவர்ந்திருக்கிறது. போர் நடைபெற்று முடிந்தபின் அந்த இடத்தில் கிடக்கும் பிணங்கள், அவை எலிகளுக்கும், காக்கைகளுக்கும் எப்படி உணவாக மாறுகிறது என்பதை எல்லாம் காட்டியிருப்பதை பார்க்கும்போது இனி ஒரு உலகப் போர் வேண்டாம் என்று உள்ளுக்குள் பிரார்த்தனை எழுகிறது. ஒளிப்பதிவை எவ்வளவு பாராட்டுகிறார்களோ, அந்தளவிற்கு படத்தொகுப்பாளரான லீ ஸ்மித்தையும் பாராட்ட வேண்டும். இந்தப் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது என்று சொன்னால் யோசிக்காமல் நம்புவார்கள். அதனால்தான் படத்தொகுப்பின் சிரத்தையை யாரும் பெரிதாகப் பாராட்டாமல் இருக்கிறார்கள்! அப்படியொரு க்ளீன் படத்தொகுப்பு. ஒவ்வொருவரின் நடிப்பும் படத்தின் எதார்த்தத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்காமல் பொருந்தியிருக்கிறது. படம் ஓடும் நேரம் முழுவதும் நம்மை உறைய வைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள், அவர்களை ஒருங்கிணைக்க இயக்குனர் சாம் மெண்டஸ் எப்படி மெனக்கெட்டிருக்கிறார் என்பதை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது. இந்த உலகப் போர்கள் செய்த ஒரே நன்மை இத்தகைய படங்களை நமக்குக் கொடுத்ததுதான்.
முந்தைய படம்: 'இது என்ன ஜெயலலிதா பில்லா?' - தமிழக நிலவரத்தை கிண்டல் செய்த தெலுங்குப் படம்! பக்கத்து தியேட்டர் #7