‘அரிமா நம்பி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் 30 நாட்கள் நடைபெற்றது.
அங்கு, அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒருமாதமாக துபாயில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து இப்படத் தயாரிப்பாளர் வினோத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எனிமி’ அப்டேட் கேட்பவர்களுக்கு, படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சென்னையில் மீதமுள்ள 10% காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. விரைவில் அதையும் முடித்துவிட்டு. அடுத்த இரண்டு வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.