Skip to main content

"அவரிடமிருந்து எனக்கு 17 மிஸ்டு கால் வந்தது" - 'சார்பட்டா' நடிகை சிலிர்ப்பு!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

bdbdsbs


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பட்டா பரம்பரை' படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, மாபெரும் வெற்றிபெற்றது. ஆர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில், நாயகியாக துஷாரா விஜயன் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா’ படத்தில் நடித்தது குறித்து பேசியபோது....

 

"ரசிகர்களிடையே ‘சார்பட்டா’ படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுக்கு நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது ‘சார்பட்டா’ படத்தில் நடந்துள்ளது. ரஞ்சித் சார் ஆஃபீஸில் இருந்து எனக்கு ஃபோன் வந்தபோது, முதலில் நான் யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்துவிட்டேன். அதன் பின் அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. பிறகு நான் விசாரிக்கையில்தான் தெரிந்தது, மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என்று. நான் உடனடியாக ரஞ்சித் சார் ஆஃபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக்கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார். அவருக்கு நான் இந்தப் பாத்திரத்தை செய்துவிடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஃபோட்டோஷூட் நடத்திய பிறகு, இந்தக் கதாபாத்திரத்தில் நான் அழகாக பொருந்தியிருப்பதாக நம்பினார். 

 

brshrsdhdsr

 

இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் இவ்வளவு வருடங்களாக காத்திருந்த வெற்றி, இந்த ‘சார்பட்டா’ படத்தில் எனக்கு அமைந்தது. ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். நான் அவரைப் பற்றி வெளியில் கேள்விபட்டதற்கு முற்றிலும் மாறாக இருந்தார். அவர் மிகவும் கலகலப்பாக இருப்பார். ஷுட்டிங் ஸ்பாட்டில் எல்லோருடனும் சேர்ந்து பேசி அரட்டையடித்துக்கொண்டிருப்பர் என்று கேள்விபட்டேன். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனெனில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடமிருந்து விலகியே இருக்கும். அதற்காகத்தான் அப்படி இருந்தார் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். இயக்குநர் ரஞ்சித் அவர்கள் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால் அவருடைய கபிலன் கதாபாத்திரத்தைவிட்டு சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னை பார்த்துக்கொண்டார். அவரது உழைப்பு பிரமிப்பானது. அனைவரும் மாரியம்மாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார்.

 

இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கதில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை துஷாரா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்