உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கம் வாயிலாகப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "ஆஸ்கர் வென்ற தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கை அன்னைக்கும் நமக்கும் உள்ள உறவை காலத்தால் அளிக்க முடியாதபடி ஒரு கருத்தை உலகிற்கு சொல்லியிருக்கிறது என நம்புகிறேன். நாட்டு நாட்டு பாடல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப் படுத்தியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், "ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணக் குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது" என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "கீரவாணி, ராஜமௌலி மற்றும் அற்புதமான ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது திறமையான இந்திய கலைஞருக்கு மேலும் ஒரு மதிப்புமிக்க அமெரிக்க அங்கீகாரம்" என ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
Congratulations to the ‘The Elephant Whisperers’ team for the Oscar win! I hope it awakens the world to the timeless message of our seers about our bonds with Mother Nature and all its children. ‘Naatu Naatu’, a global phenomenon, has made every Indian proud: kudos to the team!— President of India (@rashtrapatibhvn) March 13, 2023