பொதுவாக சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், உள்ளிட்டவற்றை மையமாக வைத்துதான் சினிமாவே இயங்குகிறது. ஆனால் இதை எல்லாம் திரையில் காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர்கள் பங்களிப்பும் மிக முக்கியமானது. பெரிதாக திரைப்பட முன் அனுபவமின்றி விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகன் நடிப்பில் வெளியான ‘ஹரா’ படத்தில் அறிமுகமானவர்தான் ஒளிப்பதிவாளர் பிரகத் முனுசாமி. அவரை நமது நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்து பேசியதில், ஹரா படத்தில் பணியாற்றிய சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்
பிரகத் முனுசாமி பேசுகையில், “நான் முதலில் பணியாற்றிய படம் இயக்குநர் விஜய் ஸ்ரீ-யின் ‘பவுடர்’ படம்தான். அப்போது எனக்கு வயது 18. அதன் பிறகு ‘ஹரா’ படத்தில் பணியாற்றும்போது என்னை மோகன் சார் பார்த்ததும், “இந்த டிஜிட்டல் உலகத்துல கேமரா தான் சின்னதா ஆக்கிட்டாங்கனு நினச்சா, கேமராமேனும் சின்னதா ஆகிட்டாரா” என ஆச்சர்யத்துடன் என்னிடம் பேசினார். ஹரா படத்தின் டைட்டில் டீசர் பண்ணும் போது இயக்குநரிடம் “பையன் சரியா பண்ணிருவானா?” என்று மோகன் சார் கேட்டார், இயக்குநரும் அதற்கு “அதெல்லாம் பண்ணிருவான்” சார் என அவருக்கு நம்பிக்கை அளித்தார். நான் வேலை செய்து முடித்து அவுட்புட் வந்த பிறகு, “நல்லா இருக்கு அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கோ” என்றார்
பெரும்பாலும் ‘ஹரா’ படத்தின் சண்டை காட்சிகளை இயக்குநரே வடிவமைப்பார். அவர் கவுண்ட்டவுன் பண்ண பண்ண ‘விக்ரம்’ படத்தில் சண்டை காட்சியில் பயண்படுத்தப்பட்ட மோக்கோபாட் கேமரா போன்று இப்படத்தில் வெறும் கேமரா கிம்பிளை வைத்து படமாக்கினோம். ஹரா படத்தில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மோகனும் நடித்துள்ளார். அவரிடம் நான் அறிமுகமாகும் போது, “சார் இந்த படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவாளர்” என்றதும் “சரி ஓகே” என்றார். அப்போதே எனக்கு பயமாகிவிட்டது. அதன் பிறகு அன்று மாலை படப்பிடிப்பிற்கு சென்று மினிமம் லைட் எல்லாம் வைத்து படப்பிடிப்பை முடித்தோம். அடுத்த நாள் காலையில் வந்து எனக்கு கை கடிகாரத்தை பரிசாக அளித்தார். அதன் பின் “நல்லா லைட் பண்ற, நிறைய கத்துக்கோ, உன்னோட லைட்டிங் நல்லா இருக்கு. கொஞ்சம் வித்தியாசமா பண்ற” எனச் சொன்னார். பிறகு பாலுமகேந்திரா மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘கோகிலா’ பட அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்
எல்லோருடைய வீட்டிலும் சினிமா என்றதும் வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆனால் என் வீட்டில் அப்படி சொல்லவில்லை. நான் 8வது படிக்கும்போதே மொபைலில் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டேன். 16 வயதில் என் அப்பாவிடம் கேமரா வேண்டும் என்று கேட்டேன். அவர், “இன்னைக்கு நான் இருக்கேன் அதை வாங்கி தர்றேன் அத வச்சு பொழச்சுக்கோ” என்றார். நானும் திருமண நிகழ்ச்சி பலவற்றில் அந்த கேமராவை வைத்து பணம் சம்பாதித்து அந்த கேமராகவுக்காக வாங்கிய கடனையும் அடைத்தேன். பிறகு இலவசமாக நிறைய பேருக்கு குறும்படங்களும் செய்து கொடுத்தேன். தொடர்ந்து நானே கண்டண்ட் உருவாக்கியும் நிறைய விஷயங்களைக் கற்றும் கொண்டேன். கேமரா வாங்கியதிலிருந்து, அதில் தான் முழு கவனமும் செலுத்தினேன். குடும்பத்தை விட்டுவிட்டேன். அப்போது அப்பாவுக்கும் உடல்நிலை சரில்லை, அப்போது என்னால் கேமராவை வைத்து சிறிய அளவில்தான் வருமானம் ஈட்ட முடிந்தது. இப்போது வரைக்கும் குடும்பத்தை சரியா பார்க்க முடியாமல் தான் உள்ளது. அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பு வருகிறது. இந்த வயதில் எனக்கு பட வாய்ப்பு வந்ததே பெரிய விஷயம்தான்.
‘ஹரா படம்’ சூட்டிங் போது அம்மா அலறிக் கொண்டு கால் செய்து, அப்பா இறந்துவிட்டதாக சொன்னார். கொஞ்ச நாள் அமைதியாக இருந்தேன். மோகன் சாரும் இயக்குநரும் போய்ட்டு வா எனச் சொன்னார்கள். நான் சென்று அடுத்த நாளே படப்பிடிப்புக்கு திரும்பினேன். படப்பிடிப்பு முடிந்ததும் மோகன் சார் என்னிடம் “எனக்கும் இதுபோல சூழ்நிலை வந்தது” என்றும் “இவ்ளோதான் வாழ்க்கை உன் வேலைய சரியாப் பாரு கண்டிப்பா நல்லா வருவ” என்றும் கூறினார்.
அலெக்ஸ் பாண்டியன் என்பவர் ‘பவுடர்’ படத்தில் மூன்று நாட்கள் சூட்டிங் உள்ளது என்று என்னை அழைத்து, அந்த படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். நான் ‘பாலிருக்கு பழம் இருக்கு’ மற்றும் ‘எக்ஸ்.எல். மாரியப்பன்’ என இரண்டு குறும்படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளேன். அதில் ‘எக்ஸ்.எல். மாரியப்பன்’ குறும்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். சின்ன வயதில் இருந்து அவருடன் தான் டிராவல் பண்ணிக்கொண்டு வருகிறேன். இப்போது அவர் இயக்குநராக அறிமுகமாகும், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ என்னும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறேன். அதில் ‘ஹரா’ படத்தில் நடித்த கெளசிக் ராம் என்பவர் ஹீரோவாகவும், சிங்கம் புலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அடுத்ததாக பழங்குடி மக்களை வைத்து மலைப்பகுதியில் லைவ் சவுண்டில் கிம்பிள் இல்லாமல் வெறும் கை கேமராவை வைத்து ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.