மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகரான காந்தராஜ் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தமிழ் நடிகைகள் குறித்து அவர் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து சர்ச்சையானது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் ரோகிணி, மருத்துவர் காந்தராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தொடுத்தார். அந்த புகார் மனுவில், “மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை ஓட்டுமொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்று பேசியுள்ளார்.
மறைந்த நடிகைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவர்களுடைய வாழ்க்கை நடத்தை என தனக்கு சம்பந்தமில்லாத எந்தவித ஆதாரமும் இல்லாமல் காந்தராஜ் பேசியுள்ளார். இதன்மூலம் நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப்மேன், டைரக்டர் என விருப்பப்படுகின்ற அனைவரிடமும் அட்ஜஸ்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து தான் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல அவர் கூறியிருக்கிறார். மேடை நாகரீகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசியிருக்கிறார்” உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் மருத்துவர் காந்தராஜ் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் கொடுத்த பேட்டி பல நடிகையின் மனதைப் புண்படுத்தி உள்ளது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.