சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'வீரபாண்டியபுரம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சுசீந்திரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய சுசீந்திரன், அடுத்தடுத்து தொடர்ந்து படம் இயக்குவது ஏன் என்ற கேள்விக்கு அளித்த பதில் பின்வருமாறு...
"வீரபாண்டியபுரம் படம் ஈஸ்வரனுக்கு முன்பே எடுத்தது. எனக்கு எண்டர்டெயின்மெண்ட் தொடங்கி எல்லாமே சினிமாதான். அதனால் ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதை எழுத ஆரம்பித்துவிடுவேன். முழுவதும் எழுதி முடித்த கதையைக்கூட வேண்டாம் என்று சில சமயம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததைவிட அதிக நேரம் கதை விவாதங்களில்தான் பங்கெடுத்துள்ளேன். என் கையில் எப்போதும் மூன்று, நான்கு கதைகள் இருக்கும். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரம் எழுத வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளேன்.
வெற்றி, தோல்வி என்பதைத்தாண்டி இதை ரசித்து செய்கிறேன். கமல் சாரிடம் இருந்துதான் இதை கற்றுக்கொண்டேன். பாத்ரூம் கழுவுகிற வேலை கொடுத்தால்கூட அதை சரியாக சுத்தமாக செய்யவேண்டும். உன்ன மாதிரி அந்த வேலையை வேறு யாராலும் செய்ய முடியாது என்று சொல்லுமளவுக்கு செய்யவேண்டும் என்று அவர் அம்மா கூறியுள்ளதாக பல பேட்டிகளில் கமல் சார் சொல்லியிருக்கிறார். ஒரு படம் முடிந்தவுடன் அந்தப் படத்தின் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் அடுத்த படத்தை நோக்கி கமல் சார் போய்விடுவார்.
படம் எடுப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. வெற்றி, தோல்வி என்பது ஆடியன்ஸ் கைகளில்தான் உள்ளது. அதனால் அந்தப் பிரஷரை நம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பயணப்பட வேண்டும் என்ற அவருடைய கொள்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்". இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.